குலதெய்வம் கோவில்களுக்கு செல்ல பக்தர்கள் குவிந்ததால் தூத்துக்குடி பஸ்நிலையத்தில் நெரிசல்


குலதெய்வம் கோவில்களுக்கு செல்ல பக்தர்கள் குவிந்ததால் தூத்துக்குடி பஸ்நிலையத்தில் நெரிசல்
x
தினத்தந்தி 18 March 2022 6:34 PM IST (Updated: 18 March 2022 6:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலதெய்வம் கோவில்களுக்கு செல்ல பக்தர்கள் குவிந்ததால் தூத்துக்குடி பஸ்நிலையத்தில் நெரிசல் காணப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு குலதெய்வம் கோவில்களில் பக்தர்கள் குவிந்து வழிபாடு செய்தனர். வெளிமாவட்டங்கள், வெளியூர்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் குவிந்ததால் மாவட்டத்திலுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
பங்குனி உத்திரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரம் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் குலதெய்வம் வழிபாடு செய்வதால் நம் முன்னோரின் ஆசியும், அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் நாளில் மக்கள் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பங்குனி உத்திரம் விழா கொண்டாட்டம் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வு காரணமாக மக்கள் குலதெய்வம் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். இந்த ஆண்டு அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு இருப்பதால், ஏராளமான மக்கள் குலதெய்வம் கோவில்களில் நேற்று காலை முதல் குவியத் தொடங்கினர்.
வழிபாடு
நேற்று காலை முதல் மக்கள் தங்கள் குலதெய்வம் கோவில்களுக்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்தனர். காட்டு பகுதிகளில் இருந்த பெரும்பாலான கோவில்களில் நேற்று முன்தினம் முதல் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் வெளியூர்களில் இருந்தும் வந்து பொங்கல் வைத்தும், ஆடுகளை பலி கொடுத்தும் வழிபாடு செய்தனர். இதனால் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டன. மக்கள் அதிக அளவில் கோவில்களுக்கு சென்றதால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் இந்த பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் இருந்து கார், வேன்களிலும் மக்கள் வந்ததால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையும் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் வாகனங்கள் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே இருந்தன. விழிநெடுகிலும் போலீசார் வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story