5 மாணவர்கள் கைது


5 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 18 March 2022 6:45 PM IST (Updated: 18 March 2022 6:45 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாணவர்களிடையே சாதிய மோதல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அரசு பஸ்சில் சாதி பாடல் சத்தமாக கேட்டதால் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாணவர்களிடையே சாதிய மோதல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அரசு பஸ்சில் சாதி பாடல் சத்தமாக கேட்டதால் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாற்றங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாதிய மோதல்கள் அதிகஅளவில் நடந்து வந்த நிலையில் அதன் பின்னர் அமைதி ஏற்பட்டு மாவட்டம் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கல்வி காரணமாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கொரோனா பரவலுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்து சுற்றிதிரிந்து வந்த மாணவர்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 
குறிப்பாக கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள், கல்வீச்சு என நடந்து வருகிறது. ராமநாதபுரம் பள்ளிகளின் வாசல்களிலேயே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் நடந்துள்ளது. இதனை அந்தந்்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போலீசாருடன் இணைந்து சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து பிரச்சினை பெரிதா காமல் பார்த்து வந்தனர். 
மோதல் போக்கு அதிகரிப்பு
இருப்பினும் மாணவர்கள் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. குறிப்பாக சாதி தொடர்பான மோதல் போக்கு அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு மாணவர்கள் அரசு பஸ்சில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரும்போது மோதல் உருவாகி உள்ளது. இதில் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்களின் சமுதாயம் சார்ந்த பாடல்களை ப்ளுடூத்தில் அதிக சத்தத்துடன் கேட்டு வந்ததால் மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் கண்டித்து அதனால் தகராறும் அதனை தொடர்ந்து இருதரப்பினரும் இருவேறு இடங்களில் மோதல் நடவடிக்கையிலும் இறங்கி கல்வீச்சு வரை சென்று உள்ளனர்.
கைது
இதுதொடர்பாக இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி 5 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து மதுரை சிறுவர் சிறையில் அடைத்துள்ளனர்.  
பொதுவாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் இதுபோன்ற சம்பவங்களின்போது சமரசம் செய்து எச்சரித்து எழுதி வாங்கியோ, நிலைய பிணையிலோ அனுப்பி விடுவது வழக்கம். ஆனால், இந்த சம்பவத்தில் சாதி மோதல் ஏற்படாமல் முற்றுப்புள்ளி வைத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதற்காக போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
கோரிக்கை
பெரியவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டு பரபரப்புக்கு பஞ்சமில்லாத ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பள்ளி மாணவர்கள் இடையே அந்த நிலை ஏற்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.  இதுகுறித்து உரிய கவுன்சிலிங் நடத்தி ஆரம்ப நிலையிலேயே பெரிதாகாமல் தடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story