காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: கணவரை தாக்கி மகளை கடத்திய பெற்றோர் உள்பட 9 பேர் மீது வழக்கு
ராசிபுரம் அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கணவரை தாக்கி மகளை கடத்திய பெற்றோர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கணவரை தாக்கி மகளை கடத்திய பெற்றோர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
ராசிபுரம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஓனான் கரடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி- கண்ணம்மாள் தம்பதியரின் மகன் அஜித்குமார் (வயது 23). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சிங்களாந்தபுரம் அருகே உள்ள கலர்காடு பகுதியை சேர்ந்த மாதேஸ்- முத்துமணி தம்பதியரின் மகள் சுஜிதா (19). பிளஸ்-2 முடித்துள்ளார். இந்த நிலையில் அஜித்குமார், சுஜிதா இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் காதலுக்கு சுஜிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அஜித்குமார், சுஜிதா இருவரும் சேந்தமங்கலத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அங்கு போலீசார் இருதரப்பு பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அஜித்குமாருடன் சுஜிதாவை அனுப்பி வைத்தனர்.
கார் கண்ணாடி உடைப்பு
இதையடுத்து அஜித்குமார் தனது காதல் மனைவி சுஜிதா மற்றும் உறவினர்களுடன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது சுஜிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செல்போனில் அஜித்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பயந்து அஜித்குமார் மனைவியுடன் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு சென்றார். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் அஜித்குமாரின் ஊர் பேளுக்குறிச்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்டதாக இருப்பதால் அங்கு அனுப்பி வைத்தனர்.
அதன்படி அஜித்குமார், சுஜிதா, அஜித்குமாரின் தாய் கண்ணம்மாள், தாய்மாமன் ரவி, உறவினர்கள் சந்திரா, சேகர், செங்கோட்டுவேல், விஜயன், விஜயா ஆகியோருடன் காரில் பேளுக்குறிச்சிக்கு சென்றார். அவர்கள் சேந்தமங்கலம் சாலையில் அப்பநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது சுஜிதாவின் பெற்றோர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காரை நிறுத்தி கற்களால் தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.
2 பேர் கைது
மேலும் காரில் இருந்த அஜித்குமார் மற்றும் அவர்களது உறவினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அஜித்குமார், தாய்மாமன் ரவி, சித்தி விஜயா (31) உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். பின்னர் சுஜிதாவை அவரது பெற்றோர் அங்கிருந்து கடத்தி சென்றதாக தெரிகிறது. அஜித்குமார், ரவி, விஜயா ஆகியோர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
இதுகுறித்து ரவி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகவனம் விசாரணை நடத்தி அஜித்குமார் மற்றும் அவரது உறவினர்களை தாக்கியதாக சுஜிதாவின் பெற்றோர் மாதேஷ்- முத்துமணி, இவர்களது மகள் இந்திரா, மகன் கவியரசு, மாதேஸ்வரனின் மாமனார், மாமியார், உறவினர்கள் செந்தில், மணிகண்டன், கணேசன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் (43) மற்றும் கணேசன் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 7 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story