தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குக்கு சீல்


தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குக்கு சீல்
x
தினத்தந்தி 18 March 2022 7:05 PM IST (Updated: 18 March 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குக்கு சீல்

குன்னத்தூர்:
குன்னத்தூரில் பெண் டாக்டர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்குக்கு மருத்துவத் துறை இணை இயக்குனர் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். 
தனியார் மருத்துவமனை
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பஸ் நிலையம் அருகே செங்கப்பள்ளி சாலையில் டாக்டர் விசுவநாதன் என்பவருக்கு சொந்தமான சுமதி கிளினிக் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு பெண் டாக்டர் இல்லாமல் பேறுகால முன்கவனிப்பு, பிரசவம், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் கடந்த 7.12.2021 அன்று பிரசவத்தின்போது திருப்பூரை சேர்ந்த சிலுவை பிரகாசி என்பவர் உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அந்த மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். 
அப்போது மகப்பேறு பெண் டாக்டர் இல்லாமல் பொது மருத்துவர் ஒருவரே பிரசவம், பேறுகால முன்கவனிப்பு, அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கக்கூடாது என்றும் அந்த மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆய்வுக்கு பின்னரும் அங்கு மகப்பேறு டாக்டர் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
அறுவை சிகிச்சை அரங்குக்கு ‘சீல்’
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா அந்த மருத்துவமனைக்கு சென்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு விதிகளை மீறி தொடர்ந்து மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனை டாக்டரிடம் விசாரித்தபோது அவரே மகப்பேறு சிகிச்சை மற்றும் கருக்கலைப்பு ஆகிய சிகிச்சைகள் அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அந்த மருத்துவமனை ஆண் டாக்டரிடம் நீங்கள் பொது மருத்துவத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்க வேண்டும், ‌ மேலும் வருங்காலங்களில் மகப்பேறு பெண் மருத்துவர் இல்லாமல் மகப்பேறு சிகிச்சை அளித்தால் ஆஸ்பத்திரிக்கு தமிழ்நாடு மருத்துவமனையின் நிர்வாக சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்து, எச்சரிக்கை நோட்டீசையும் சுவற்றில் ஒட்டி விட்டு சென்றனர்.

Next Story