தக்காளி சின்ன வெங்காயத்தை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தக்காளி சின்ன வெங்காயத்தை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 7:09 PM IST (Updated: 18 March 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி சின்ன வெங்காயத்தை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி தக்காளி, சின்ன வெங்காயத்தை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்காளியை சாலையில் கொட்டினர்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
சின்ன வெங்காயத்திற்கு கிலோவுக்கு ரூ.30-ம், தக்காளிக்கு கிலோவுக்கு ரூ.15-ம் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யக்கோரியும், தமிழ்நாடு அரசு உடனடியாக சின்ன வெங்காயம், தக்காளியை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்டி, பெட்டியாக தக்காளியை கொண்டு வந்து சாலையில் கொட்டினார்கள். அதுபோல் மூட்டைகளில் கொண்டு வந்த சின்ன வெங்காயத்தையும் சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கூட்டுறவு வங்கிகள்
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பேசும்போது, ‘தமிழகத்தில் 112 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. 4 ஆயிரத்து 474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் விலை குறையும்போது கொள்முதல் செய்து விவசாயிகளை பாதுகாக்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
அதன்படி சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.30-ம், தக்காளிக்கு கிலோவுக்கு ரூ.15-ம் விலை நிர்ணயம் செய்து கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்து உழவர்களை காப்பாற்ற வேண்டும். தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்க பிரதிநிதியான ராஜேந்திர சிங் கோல்டன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story