திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 18 March 2022 7:46 PM IST (Updated: 18 March 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது

திருச்செந்தூர்:
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 
பங்குனி உத்திர திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று ேகாலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
அதிகாலை 5.30 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.
திருக்கல்யாணம்
மாலையில் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு சென்றனர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவிலை சேர்ந்தனர்.
இரவு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் 
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பாத யாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
குன்றுமேலய்யன் சாஸ்தா
சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story