திண்டுக்கல்லில் சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
திண்டுக்கல்லில் பெண்களிடம் சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள், நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சீட்டு நடத்தி தங்களை ஒரு பெண் மோசடி செய்ததாக கூறி புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்கிறோம்.
இதனால் அவசர தேவைக்கு எங்களின் சேமிப்பு மட்டுமே உதவியாக இருக்கும். இந்த நிலையில் ஒரு பெண் சீட்டு நடத்துவதாக கூறினார். மேலும் சிறுசேமிப்பு, ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு ஆகியவற்றில் மாதம் ரூ.100 முதல் நம்மால் முடிந்த தொகையை செலுத்தலாம் என்றார். அதை நம்பி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சீட்டு பணம் செலுத்தினோம். அதுமட்டுமின்றி, எங்களுடைய அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் சேர்த்துவிடலாம் என்றார்.
ரூ.70 லட்சம்
அதையடுத்து எங்களுக்கு தெரிந்தவர்களையும் சீட்டில் சேர்த்து விட்டோம். அதோடு சுயஉதவிக்குழு மூலம் வாங்கிய கடன் தொகையையும் அவரிடம் கொடுத்தோம். அவ்வாறு நாங்கள் அனைவரும் சுமார் ரூ.70 லட்சம் வரை செலுத்தினோம். இதில் தவணை காலம் முடிந்தும் உரிய பணம் எங்களுக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையே இந்த மாதத்துக்கான சீட்டு தவணை தொகை வசூலிக்க அவர் வரவில்லை. இதனால் அவரை தேடி சென்ற போது அந்த பெண் வீட்டில் இல்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வருகிறது. இதனால் பணத்தை இழந்து நாங்கள் தவிக்கிறோம். எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story