குமரியில் ஒரு மாதமாக உரத் தட்டுப்பாடு
குமரியில் ஒரு மாதமாக உரத் தட்டுப்பாடு நிலவுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
நாகர்கோவில்:
குமரியில் ஒரு மாதமாக உரத் தட்டுப்பாடு நிலவுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் சத்ய ஜோஸ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, கூட்டுறவு துணை பதிவாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர்ப்பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ மற்றும் விவசாய பிரதிநிதிகள் செல்லப்பா, பத்மதாஸ், தங்கப்பன், விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பேயன்குழி பகுதியில் இரட்டைக்கரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை பாதிப்புக்கு அரசு சீரமைப்பின் நிதி எவ்வளவு கிடைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 50 நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு நில அளவுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
உரம் தட்டுப்பாடு
மாவட்டம் முழுவதும் யூரியா உரம் கடந்த ஒரு மாதமாக தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருங்கூர் மலைப்பகுதியில் உள்ள பன்றி பண்ணையில் இருந்து வரும் கழிவுகள் அந்த பகுதியில் உள்ள குளத்தில் கலக்கிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளச்சல் நகராட்சிக்குட்பட்ட வெள்ளியாகுளத்தில் 2 உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து வருகிறது. எனவே குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாய நிலங்கள் காக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கலெக்டர் விளக்கம்
இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-
மழைக்கு அரசிடம் இருந்து சீரமைப்பு பணிக்காக ரூ.4 கோடி வந்துள்ளது. கோர்ட்டு உத்தரவுபடி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது 900 டன் யூரியா உரம் கேட்டுள்ளோம். இந்த மாத இறுதிக்குள் யூரியா உரத்தை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். ஏப்ரல் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வாழ்த்து
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் தொடர்பாக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மருங்கூர் மலைப்பகுதியில் உள்ள பன்றி பண்ணைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறையில் சிறப்பாக பணியாற்றி மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த்துக்கு, விவசாய பிரதிநிதிகள் வாழ்த்து கவிதை வாசித்து பொன்னாடை அணிவித்தனர்.
மயங்கி விழுந்த விவசாயி
முன்னதாக விவசாயிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது பாபு என்ற விவசாயி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பாபுவின் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். பின்னர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பிறகு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story