பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பங்குனி உத்திரத்தையொட்டி  முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 18 March 2022 8:46 PM IST (Updated: 18 March 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


திண்டுக்கல்:
தமிழ் மாதங்களில் வரும் 12-வது மாதமான பங்குனி மாதம் மற்றும் நட்சத்திர வரிசைகளில் 12-வதாக வரும் உத்திர நட்சத்திரமும் ஒன்றாக சேரும் நாளே பங்குனி உத்திரம் ஆகும்.
இந்நாளில் தான் சிவன்-பார்வதி, முருகன்-தெய்வானை மற்றும் ராமர்-சீதா உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற பங்குனி உத்திரத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
திண்டுக்கல்
அதன்படி திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணியசாமி கோவிலில் காலை 5.30 மணியளவில் பால், பழம், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு பால்குட ஊர்வலம் நடந்தது.  இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்த பிறகு சாமிக்கு பால் அபிஷேகம், ராஜ அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் அழகிய மின்தேரில் சாமி முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது. இன்று (சனிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம், நாளை தெப்ப உற்சவமும் நடக்கிறது.
திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோவில், திண்டுக்கல் ரெயிலடி சித்திவிநாயகர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை-சுப்பிரமணியர் என திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 
அதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில், சீனிவாச பெருமாள்- அலமேலுமங்கை தாயாருக்கு மாலை 6 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி அடுத்த அய்யம்பாளையம் காந்திகுன்றம் மலைமேல் அமைந்துள்ள அருள்முருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி முருகனை வழிபட்டனர். இதேபோல் பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் சன்னதி வளாகத்தில் உள்ள முருகன் சன்னதி, தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா நடைபெற்றது. 

திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவில்
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கோபால்பட்டி காளியம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு  பூஜை நடைபெற்றது. 

தாண்டிக்குடி
தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையடுத்து பக்தர்கள் அலகு குத்தி இளநீர் காவடி, பால் காவடி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், அரிசிமாவு, பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து முருகப்பெருமான் பூந்தேரில் பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பண்ணைக்காடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. 

வேடசந்தூர்
வேடசந்தூரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story