தமிழக பட்ஜெட் பற்றிய மக்களின் கருத்து என்ன?
தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.
மன்னார்குடி:
தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.
பட்ஜெட் கருத்து
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருந்தன.
இந்த பட்ஜெட் குறித்த மக்களின் கருத்துகள் வருமாறு:-
மிகப்பெரிய வரப்பிரசாதம்
மன்னார்குடியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ரேணுகாதேவி:
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தக அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேபோல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பிற்கான செலவுகளை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
மன்னார்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் எஸ்.ராஜா:
தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி, மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் என சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக்குழு, பயிர் கடன் வழங்க ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கி இருப்பது போன்ற அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் வரவேற்கும் வகையில் உள்ளது.
வளர்ச்சிமிகு திட்டம்
திருவாரூர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி பொதுச்செல்வன்:
தமிழக பட்ஜெட் வளர்ச்சிமிகு திட்டமாக உள்ளது. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கல்விக்கு ரூ.36 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் இடைநிற்காமல் கல்வி பயின்று உயர் கல்வி பெற்றிடும் வகையில் 6 முதல் 12 வகுப்பு வரை தொடர்ந்து படிக்கின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என ஊக்க தொகை வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. வனத்துறை ஆணையம் அமைக்கப்பட்டு நாட்டின் வன பரப்பளவினை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தொலைநோக்கு சிந்தனை
தமிழக இயற்கை உழவர் இயக்க செயலாளர் வரதராஜன்:
கல்வி, தொழில், வேளாண் என அனைத்து துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக மாற்றுவதற்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதி தொழில் வளர்ச்சி அடையும். தூர்வாரும் பணிகள் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. மகளிர் சுய உதவிக்குழு கடன், நகை கடன் தள்ளுபடிக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டம், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் போன்றவை தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்படிப்பை தொடர உதவும்
கூத்தாநல்லூரை சேர்ந்த அசோக் சந்தானகிருஷ்ணன்:
தமிழக பட்ஜெட் மிகவும் வரவேற்க கூடிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு மாணவிகளின் உயர் படிப்பை ஆர்வத்துடன் தொடர உதவும். வெள்ளத்தடுப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, முதியோர் உதவித்தொகை, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளும் வரவேற்கும் விதமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
----
Related Tags :
Next Story