‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நீண்ட கால பிரச்சினை தீர்ந்தது
சென்னை வேளச்சேரி 100 அடி ரோடு புறவழிச்சாலையில் லட்சுமி நகர் போக்குவரத்து சிக்னல் தொடர்ந்து நீண்ட காலமாக இயங்காமல் இருப்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை விரைந்து நடவடிக்கை எடுத்து சிக்னல் கருவிகளை சரி செய்துள்ளது. சிக்னல் இயக்கப்பட்டதால் மகிழ்ந்த சாலைவாசிகள் போக்குவரத்து துறைக்கும், ‘தினத்தந்தி’க்கும் தங்களது நன்றியை தெரிவித்து உள்ளனர்.
குடிநீர் குழாய்க்கு கிடைத்தது விடிவு
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள காசிபுரம் ஏ-பிளாக் 3-வது தெருவில் குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் மீதமாகி எஸ்.என்.செட்டி தெரு மெயின் ரோட்டில் தேங்கி நிற்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு தெருக்களில் நீர் தேங்காதவாறு சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், விரைந்து செயல்பட்ட ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
ஆபத்தான மின் இணைப்பு பெட்டி
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு, டபுள்யூ-பிளாக், சி-செக்டர் 16-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியானது அபாயகரமாக திறந்த நிலையில் இருக்கிறது. இந்த நில பல மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது. அருகிலேயே பள்ளிக்கூடம் இருப்பதாலும், குழந்தைகள் நடமாடும் பகுதியாக இருப்பதாலும் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு மின் இணைப்பு பெட்டியை சரிசெய்திட ஆவண செய்ய வேண்டும்.
- வே.ஜெயக்குமார், சமூக ஆர்வலர்.
முடங்கிப்போன 3-வது கண்
சென்னை கீழ்ப்பாக்கம் ராணி அண்ணாநகரில் பல மாதங்களுக்கு மேலாக கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருக்கிறது. மேலும் அதன் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனை சரி செய்து தருமாறு பகுதி வாழ் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
- ர.சாஜித் பாஷா. அமைந்தகரை.
ஆகாயத் தாமரை அகற்றப்படுமா?
சென்னை திருவான்மியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பூங்கா பகுதியை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் இருக்கிறது. இதில் கடந்த சில நாட்களாக ஆகாயத்தாமரை அதிகளவு காணப்படுகிறது. இதனால் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து ஆகாயத்தாமரையை அகற்றும் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
- பொதுமக்கள்.
அலட்சியம் கூடாது
சென்னை வியாசர்பாடி 2-வது பள்ள தெருவில் மழைநீர் வடிகால் பணி தொடக்கத்தில் சில நாட்கள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மந்தமாய் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இந்த தெருவில் 2 பள்ளிகள் இருப்பதால் பள்ளிக்கு, சைக்கிளில் மற்றும் நடந்து செல்லும் குழந்தைகள் ஏராளம். கால்வாய் திறந்தநிலையில் இருப்பதால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- வரதராஜன், வியாசர்பாடி.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சோகண்டி கிராமம் மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் பாலம் போட்டு சில நாட்கள் தான் ஆகின்றது. இந்த நிலையில் திடீரென கழிவுநீர் பாலம் சேதமடைந்தது உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்தசாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வழியில் இவ்வாறு உள்ளதால் விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- செ.வினோத்குமார் சோகண்டி.
குப்பை குவியலில் பெயர் பலகை
சென்னை அயனாவரம் மேட்டுத்தெருவில் உள்ள பெயர் பலகை உடைந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இப்பலகையில் சாலையோரத்தில் ஒரு மூலையில் தூக்கி போட்டுள்ளனர். குப்பைகளுடன் கிடக்கும் பெயர் பலகையை பார்க்கவே அலங்கோலமாக இருக்கிறது. அதிகாரிகள் கவனித்து மீண்டும் தெருவில் பெயர் பலகை இடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- அருண், அயனாவரம்.
அத்துமீறலுக்கு முடிவு எப்போது?
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காலவாக்கம் ஏரிக்கரையில் தொழிற்சாலை கழிவுகளை, இரவு நேரங்களில் யாருமில்லாத நேரத்தில் வந்து யாரோ சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் நீர்நிலைகள் மாசுபடுவதோடு, அப்பகுதியும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்பட்டு இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடாதவாறு தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ஆ.குருநாதன், செங்காடு.
ஆபத்தை உணராதது ஏனோ?
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கடப்பேரி மெயின் ரோட்டில் திருநீர் மலை சாலை மற்றும் நெடுஞ்சாலை இணையும் பகுதி முன்பு ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை திறந்து கிடக்கிறது. சாலையில் இவ்வாறு திறந்து கிடப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட துறை உடனடி நடவடிக்கை எடுத்து விபரீதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
- வாகன ஓட்டிகள்.
Related Tags :
Next Story