30 மலைக்கிராம மக்கள் உண்ணாவிரதம்


30 மலைக்கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 March 2022 9:42 PM IST (Updated: 18 March 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டுவில், வனத்துறையை கண்டித்து 30 மலைக்கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கடமலைக்குண்டு: 


வனத்துறை கட்டுப்பாடு
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியில் அரசரடி, இந்திராநகர், காந்திகிராமம், பொம்மராஜபுரம் உள்ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகள் காப்பகமாக அரசு அறிவித்தது. 
இந்த அறிவிப்பை தொடர்ந்து வனத்துறையினர் மலைக்கிராம மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன் ஒரு பகுதியாக மலைக்கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்தது. 

உண்ணாவிரதம் 
இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக கோர்ட்டு உத்தரவின் பேரில் மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து மலைக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் இன்று  காலை, கடமலைக்குண்டு கிராமத்துக்கு காந்திகிராமம், வாலிப்பாறை, மஞ்சனூத்து, அரசரடி, இந்திராநகர், தும்மக்குண்டு உள்ளிட்ட 30 மலைக்கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் எடுத்து வரும் வனத்துறையை கண்டித்தும், தும்மக்குண்டு, கோம்பைத்தொழு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலைக்கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போலீஸ் பாதுகாப்பு
இதில் மலைக்கிராம மக்களுக்கு ஆதரவாக தேனி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அண்ணாமலை, விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜப்பன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அங்கு ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு மலைக்கிராம மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story