நீலகிரியில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


நீலகிரியில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 March 2022 10:14 PM IST (Updated: 18 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

ஊட்டி

நீலகிரியில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப் படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக காய்ந்த சருகுகள், மரக்கிளைகள், புகை பிடிப்பவர்களால் வீசி எறியப்படும் சிகரெட் துண்டுகள், வனப்பகுதி அருகே தோட்டங்களை சுத்தம் செய்து சேகரிக்கப்படும் கழிவுகளை எரிப்பதாலும் காட்டுத்தீ ஏற்பட காரணமாக உள்ளது.

 வனப்பகுதி வழியாக செல்லும் சாலை ஓரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் எக்காரணத்தைக் கொண்டும் சமையல் செய்யக்கூடாது. காட்டுத்தீயால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எனவே, பொதுமக்கள் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவது உடன், காட்டுத்தீ ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். 

கடும் நடவடிக்கை

வனப்பகுதியில் தீ ஏற்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.  வனப்பகுதிகளில் முன் அனுமதியின்றி உள்ளே செல்வதும் மற்றும் காட்டுத்தீ ஏற்படுத்துவதும் குற்றமாகும். எனவே காட்டு தீ ஏற்பட காரணமானவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நீலகிரி வன கோட்ட அலுவலர் சச்சின், கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார், ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, சரவணக் கண்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story