நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்காள், தங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்காள், தங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வெண்ணந்தூர்:
நாச்சிப்பட்டியில் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்காள், தங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கு
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தர் அருகே நாச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி ஆசாரி. இவருக்கு மீனாட்சி, சம்பூர்ணம் என்ற 2 மகள்களும், தெய்வ சிகாமணி என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கு நாச்சிப்பட்டியில் சுமார் 1.71 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குப்புசாமி ஆசாரி கடந்த 2009-ம் ஆண்டு திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கவேலுக்கு தனது மகள் சம்பூரணம் சம்மதத்துடன் எழுதி வைத்துள்ளார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனாட்சி, தெய்வசிகாமணி ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது சம்பூரணமும் தனது மீனாட்சி, தெய்வசிகாமணியுடன் சேர்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவர்களை எதிர்த்து தங்கவேல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பரபரப்பு
இந்த வழக்கில் நாச்சிப்பட்டியில் உள்ள இடத்தை அளக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ராசிபுரம் வருவாய்த்துறையினர் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் பாதுகாப்புடன் நேற்று நிலத்தை அளக்க முயற்சி நடந்தது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனாட்சி, சம்பூரணம், தெய்வசிகாமணி ஆகிய 3 பேரும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் தாங்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மீனாட்சி, சம்பூர்ணம் தாங்கள் வைத்திருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த போலீசார் உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களிடமிருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிலம் அளவீடு செய்யப்பட்டது. நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்காள், தங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story