கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலப்பட பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலப்பட பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கோட்டாட்சியர் சரவணன், நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
மாநில அரசு உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் உரிமை பாதுகாப்புத்துறையின் மூலம் மாநில, மாவட்ட, கோட்ட அளவில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் வகையில் காலாண்டு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் பொருட்கள் போலியான தன்மை என தெரிய வந்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நுகர்வோர் மாவட்ட மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலப்படம் கலந்த பொருட்கள் விற்றாலும், அளவீடுகளில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story