கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
பண்ருட்டி அருகே கழுத்தை அறுத்து வாலிபரை படுகொலை செய்த அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனா்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் நெய்வேலி ரோட்டில் வசித்து வருபவர் சேகர் என்கிற குணசேகர்(வயது 65), விவசாயி. இவருடைய மகன்கள் தனசேகர்(34), நீலமேகம்(32). பால் வேன் டிரைவரான தனசேகருக்கு திருமணமாகி கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய தம்பி நீலமேகம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ள முந்திரிக்கொட்டை மற்றும் காய்களை விற்று அதில் வரும் பணத்தில் தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை தட்டி கேட்ட குணசேகர் மற்றும் அண்ணன் தனசேகரிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
அண்ணன்-தம்பி தகராறு
இந்த நிலையில் நீலமேகம், தான் கார் வாங்கி தொழில் செய்யப்போவதாக கூறி தந்தை குணசேகரிடம் தகராறு செய்து ரூ.1 லட்சத்தை வாங்கிச் சென்றார். ஆனால் கார் எதுவும் வாங்காமல் அந்த பணத்தில் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் நீலமேகத்தின் மீது தனசேகருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீலமேகம் வழக்கமாக மது அருந்திவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனசேகருக்கும், நீலமேகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது தகராறாக மாறியது.
கழுத்தை அறுத்து கொலை
இதில் ஆத்திரமடைந்த தனசேகர் கத்தியால் நீலமேகத்தின் கழுத்தை அறுத்தார். பின்பு அவரது மார்பில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த நீலமேகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் இந்த கொலை சம்பவம் உடனடியாக வெளியே தெரியவில்லை. பின்னர் நேற்று காலையில் குணசேகரின் வீ்ட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் நீலமேகம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கொலை நடந்த வீ்ட்டை நேரில் பார்வையிட்டார். பின்னர் நீலமேகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கைது
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியில் தலைமறைவாக இருந்த தனசேகரை கைது செய்தனர். தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story