முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
விழுப்புரம் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரிக்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கதிர்வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணிக்கு செடல் உற்சவமும், அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து ஊர்வலமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது உடலில் அலகு குத்தியபடி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன் பிறகு முருகனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்தோப்பு
விழுப்புரம் அகரம்பாட்டை முத்தோப்பில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணியளவில் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. 10 மணிக்கு வெற்றிவேல் வீதியுலாவும், 11.30 மணிக்கு செடல் உற்சவமும், 12.30 மணிக்கு கற்பூர அபிஷேகமும் நடந்தது.
இவ்விழாவில் வெற்றிவேலை தூக்கி வந்த பக்தர்கள் சிலரின் உடல் முழுவதும் மிளகாய்பொடி கரைசலை ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நடந்த சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூந்தோட்டம்
விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெரு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத்தையொட்டி காலை 9 மணியளவில் 21 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இந்திராநகர் பாலமுருகன்
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள இந்திரா நகர் பாலமுருகன் கோவிலில் காலை 6 மணிக்கு காவடி அபிஷேகமும், 9 மணிக்கு காவடி ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு இடும்பன் பூஜையும், இரவு 7 மணிக்கு சாமி வீதிஉலாவும் நடந்தது.
மேலும் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள முருகன் கோவில், ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள பாலமுருகன் கோவில் உள்ளிட்ட விழுப்புரம் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
பிள்ளையார்குப்பம்
பில்லூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு காவடி ஊர்வலமும், 12 மணிக்கு செடல் உற்சவமும், 12.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் பக்தர்கள் சிலர் தங்களது தாடையில் அலகு குத்திக்கொண்டு கொதிக்கும் எண்ணெய்யில் வடைபோட்டு சிறிது நேரத்தில் அந்த வடைகளை எண்ணெய் சட்டியில் இருந்து கையால் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை பார்த்ததும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மிகுந்த நெகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story