வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகைகள்- 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
நாகை அருகே சிக்கலில் வீட்டின் ததவை உடைத்து 39 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் ரூ.3 லட்சத்தையும் அள்ளிச்சென்றனர்.
சிக்கல்:
நாகை அருகே சிக்கலில் வீட்டின் ததவை உடைத்து 39 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் ரூ.3 லட்சத்தையும் அள்ளிச்சென்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வெளிநாட்டில் வேலை
நாகை அருகே உள்ள சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன் என்கிற வேல்ராஜ்(வயது 50). இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் தனது தாயார் மல்லிகாவுடன் சிக்கல் வடக்கு வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 15-ந் தேதி நாகலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு தாயாருடன் கோவில் திருவிழாவிற்காக வேளாங்கண்ணி அருகே பூவத்தடி கிராமத்துக்கு சென்று உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
39 பவுன் நகைகள்-2 கிலோ வெள்ளி கொள்ளை
நேற்று காலை நாகலட்சுமி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒருவர், நாகலட்சுமிக்கு போன் செய்து அவரது வீட்டில் மின்விளக்கு எரிவதாகவும், பின்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி உடனடியாக தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறைகளில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 39 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த எல்.இ.டி. டி.வி. உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. அந்த அறை முழுவதும் பீரோவில் இருந்த ஆடைகள் சிதறி கிடந்தன.
போலீஸ் அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு கொள்ளை தொடர்பாக அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடத்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ‘ரியோ’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து வடக்குவீீதி வழியாக சென்று சிக்கல் மெயின் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
வலைவீச்சு
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story