பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் கலெக்டர் மேயர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்


பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் கலெக்டர் மேயர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 18 March 2022 11:39 PM IST (Updated: 18 March 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மேயர் எஸ்ஏசத்யா ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

ஓசூர்:
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
சந்திரசூடேஸ்வரர் கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தேர்த்திருவிழா தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் சாமி வீதிஉலாவும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு சாமிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், சந்திரசூடேஸ்வரர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை தேரோட்டம் ஓசூர் தேர்பேட்டையில் நடந்தது. முன்னதாக, சிறிய தேரில் விநாயகர் வைக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில்  சந்திரசூடேஸ்வரர் சாமி ஏற்றப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, உதவி கலெக்டர் தேன்மொழி, துணை மேயர் சி. ஆனந்தய்யா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து  தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.
 மரகதாம்பிகை அம்மன் தேர்
 பின்னர், மரகதாம்பிகை அம்மனின் தேர் இழுத்து செல்லப்பட்டது. இந்த விழாவில், ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், தேர் கமிட்டி தலைவரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் ஆகியோரும், கிருஷ்ணவேணி ராஜி, மாதேஸ்வரன், சென்னீரப்பா, டாக்டர் ஸ்ரீ லட்சுமி நவீன் உள்ளிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பூனப்பள்ளி தி.முக. கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா, பெத்தபேளகொண்டப்பள்ளி பிருந்தாவனா கல்விக்குழும தலைவர் பி.எல்.சேகர், தொழிலதிபர் முத்துக்கிருஷ்ணன், ஓசூர் மாநகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். 
நேர்த்திக்கடன் 
இந்த தேர்த்திருவிழாவில், ஓசூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, ஓசூர் தேர்பேட்டை மற்றும் நகரின் பல இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீர், நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. தேர்த்திருவிழாவையொட்டி ஓசூர் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. 
தேர்த்திருவிழாவின்போது, சரும நோய், மருக்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தேர் மீது உப்பு மற்றும் மிளகு கலந்து சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மன் தேர்மீது எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், விழாவிற்கு வந்த பக்தர்கள், வாழைப்பழத்தில் மரிக்கொழுந்தை சொருகி தேர் மீது வீசி வழிபட்டனர்.
300 போலீசார் பாதுகாப்பு
விழாவையொட்டி, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story