தமிழக பட்ஜெட் பற்றிய மக்களின் கருத்து என்ன?
தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
மயிலாடுதுறை:
தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ெஜட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருந்தன.
இந்த பட்ெஜட் குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-
ரூ.1000 வழங்கும் திட்டம்
மயிலாடுதுறை வர்த்தக சங்க முன்னாள் தலைவர் செந்தில்வேல்:- நிதி பற்றாக்குறையை குறைக்கும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்க திட்டமாகும். கிழக்கு கடற்கரை சாலை விஸ்தரிப்பு மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு போக்குவரத்திற்கு பயனுள்ளதாக அமையும். கொரோனா தொற்று பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலும் மக்களை பாதிக்காத வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
மயிலாடுதுறை கல்லூரி மாணவி சினேகா:- அரசு பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை மாணவ-மாணவிகள்தான் படித்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் இந்த திட்டத்தினால் மாணவிகள் அனைவரும் கல்லூரியை நோக்கி செல்வார்கள். இந்த திட்டத்தினால் ஏழை மாணவிகளின் உயர்கல்வி இனி தடைபடாது. எனவே இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
வரவேற்கத்தக்கது
சீர்காழியை சேர்ந்த விவசாயி கோபால்:- தமிழக அரசு இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். மேலும் மாணவர்கள் வாங்கிய கடன் ரத்து குறித்து அறிவிப்பு ஒன்றும் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும் போது ரூ.1,000 மாதம் மாதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
முதல்-அமைச்சருக்கு நன்றி
சீர்காழி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எம்.என்.ஆர்.ரவி:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தொழில்துறை, சமூக வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட அனைத்து துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Related Tags :
Next Story