தமிழக பட்ஜெட் பற்றிய மக்களின் கருத்து என்ன?


தமிழக பட்ஜெட் பற்றிய மக்களின் கருத்து என்ன?
x
தினத்தந்தி 18 March 2022 11:45 PM IST (Updated: 18 March 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்:
தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மாணவிகளுக்கு ரூ.1,000
2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருந்தன.
இந்த பட்ஜெட் குறித்து நாகை மாவட்ட பொதுமக்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
 திட்டச்சேரியை சேர்ந்த லட்சுமி பிரியா:- கடந்த மே மாதத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை நிதி மேலாண்மையில் அடைந்துள்ள சாதனைகள் அனைத்துமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலாலும், முழு ஆதரவினாலும் மட்டுமே செயல்படுத்தப்பட்டது.
 அரசு பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்றத்தக்கது. இந்த அறிவிப்பினால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளியின் தரமும் உயரும்.
பாராட்டுக்குரிய பட்ஜெட்
கீழ்வேளூரை சேர்ந்த பிரசாத்:-
 தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத பாராட்டுக்குரிய பட்ஜெட்‌‌. மாற்றுத்திறனாளிகளை சதவீத அடிப்படையில் பிரித்து அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், ரூ.808.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுபாராட்டுக்குரியது‌. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த பட்ஜெட்டால் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும்.
பாலையூரை சேர்ந்த விவசாயி தமிழ்ச்செல்வன்:- 
டெல்டா கடைமடை பகுதிகளில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மட்டுமல்லாமல், அதற்குரிய பணிகள் அனைத்தும் முழுமையாக நடைபெறுகிறதா? என ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மேட்டூர் அணையில் ஜூன் 12-ந்தேதி திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு வருவதற்கு 1 மாத காலம் ஆகிறது. இதனால் சாகுபடிக்கு கால தாமதம் ஏற்படுகிறது. எனவே தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெண்களின் முன்னேற்றம்
வேளாங்கண்ணியை சேர்ந்த ஆனந்தி:- 
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் பட்ஜெட்டாக உள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் மேற்படிப்புக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகள் பயன் அடைவார்கள்.
ஆவராணி புதுச்சேரியை சேர்ந்த வைஜெயந்தி:- சமூக ஊடகங்களில் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழகத்தில் சமூக வலைதளங்கள் நாகரீகத்துடன் கையாளுவதற்கு முன் மாதிரியான நடவடிக்கையாக உள்ளது. இவ்வாறு பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Next Story