முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர்,
சிறப்பு அபிஷேகம்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், பூஜையும் செய்யப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம்
தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வர தொடங்கினர்.
மேலும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இதில் கரூர், வெண்ணைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரூர் பகுதிகளில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடைபெற்றது.
நொய்யல்
புன்னம்சத்திரம் அருகே பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் புஷ்பம் காவடி, இளநீர் காவடி மற்றும் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு பால், பழம், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமி மலர்களால் அலங்காரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் மலையில் இருந்து சுவாமி அழைத்து வரப்பட்டு மயில்வானத்தில் எழுத்தருளி பல்லாக்கில் வீதி உலா வந்தார்.
தோகைமலை
தோகைமலை அருகே ஆர்டிமலை மலை மீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவில் முன்சன்னதியில் உள்ள முருகனுக்கு பங்குனி உத்திரத்தையொட்டி அர்ச்சகர் கந்தசுப்பிரமணியன் தலைமையில் பால், தயிர், விபூதி, குங்குமம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே புங்கம்பாடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மொட்டையாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு முருகன், வள்ளி-தெய்வானைக்கு பால், விபூதி, சந்தன் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகன் வள்ளி-தெய்வானையுடன் தங்ககாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
குளித்தலை
குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கடந்த 12-ந்தேதி முகூர்த்தகால் ஊன்றப்பட்டது. 16 -ந் தேதி இக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு பால்குடம் தீர்த்தக்குடம் எடுத்துச் சென்றனர். அங்கு சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலில் திருவிழா தொடங்கியதிலிருந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்திற்குள் சுவாமி உலா நடைபெற்றது. இந்த நிலையில் பங்குனி உத்திர நாளான நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாணவேடிக்கையுடன் சுவாமியின் வீதி உலா நடந்தது இதில் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு அந்த அனைவருக்கும் திருவிழா தொடங்கியதிலிருந்து தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story