பத்ரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம்-சிகாகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
பங்குனி உத்திரத்தையொட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. சிகாகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
கறம்பக்குடி,
பத்ரகாளியம்மன்
கறம்பக்குடி அருகே உள்ள செவ்வாய்பட்டியில் பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை.
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மண்டகபடிதாரர்கள் சார்பில் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. முளைப்பாரி திருவிழா, மது எடுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
தேரோட்டம்
இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றினர். மாலையில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி நாடகம், இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டன.
இதேபோல் கறம்பக்குடி முருகன் கோவில், நரங்கியப்பட்டு வேம்பையன் கோவில்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்
விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டி ராஜராஜேஷ்வரி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தையொட்டி முருகன்-வள்ளி சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதையொட்டி மலைவாழ் மக்கள் (நரிக்குறவர்) இனத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சீர்வரிசையுடன் ராஜாளிப்பட்டி கிராமத்திற்கு வந்தனர். அங்குள்ள தெப்பக்குள பிள்ளையார் கோவிலிலிருந்து தாங்கள் கொண்டுவந்த சீர்வரிசைகளுடன் மேள தாளம் முழங்க ஊர்வலமாக சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தனர். அங்கு மணமேடையில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் உள்ள உற்சவர் சிலை முன்பு தத்ரூபமாக இருக்கும் விதமாக இந்து முறைப்படி மாலைமாற்றி, கன்னியாதானம் செய்து முருகன்- வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ராஜாளிபட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேலும் மணமகன் மணமகள் வீட்டார் சார்பில் மொய் எழுதும் நிகழ்ச்சி நடந்தது.
தெப்ப உற்சவம்
குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு 7 மணிக்கு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்ப தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.
இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குதிரை சிலைக்கு மாலை
குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் முன்பு அமைந்துள்ள பிரமாண்ட குதிரை சிலைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காகிதப்பூ மாலைகள் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதன்பின்னர் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story