முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
பங்குனி உத்திர விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து ஆடியபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
சேலம்:-
பங்குனி உத்திர விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து ஆடியபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பங்குனி உத்திர விழா
பங்குனி உத்திர விழாவையொட்டி சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
காலையில் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாப்பேட்டை வையாபுரி தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு, ஆச்சிமுத்து தெரு, முனியப்பன் கோவில் தெரு, தியாகி நடேசன் தெரு, செங்குந்தர் மேட்டு தெரு, ராமநாதபுரம், தங்கசெங்கோடன் தெரு உள்ளிட்ட பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக காவடி எடுத்து ஆடியபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
கந்தாஸ்ரமம்
விழாவையொட்டி கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் புஷ்பாஞ்சலி நாட்டிய கலாலய மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமத்தில் பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பக்தர்கள் பலர் கோவிலுக்கு காவடி எடுத்து வந்தனர்.
சேலம் அழகாபுரம் முருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசாமி ஆறுமுகன் கோவில்
சேலம் பெரமனூர் கந்தசாமி ஆறுமுகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சாமிகு சிறப்பு அபிஷேகமும், வள்ளி, தெய்வானையுடன் முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இதையொட்டி தீர்த்தக்குடம், பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
சேலம் ஊத்துமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி மூலவருக்கு பால், தயிர், திரவியம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காவடி பழனியாண்டவர்
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி காலையில் காவடி பழனியாண்டவருக்கு சுவர்ண முருகன் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து ஆடினர்.
இதையடுத்து மாலையில் திருப்புகழ் பஜனை, சொற்பொழிவு, 1,008 பால்குட ஊர்வலம் ஆகியவை நடந்தது. அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
சந்தனகாப்பு அலங்காரம்
சேலம் வீராணம் அருகே உள்ள கெம்பேரிகாடு சுவாமி மலை சிவசக்தி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், அம்மாபேட்டை செங்குந்தர் முருகன் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் சேலம் மெய்யனூர் ஆலமரத்து காடு பாலதண்டாயுதபாணி, ஊத்துமலை முருகன், திருவாக்கவுண்டனூர் பாலதண்டாயுதபாணி, இளம்பிள்ளை சுப்பிரமணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
===========
Related Tags :
Next Story