முதியவருக்கு 20 ஆண்டு சிறை


முதியவருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 19 March 2022 12:53 AM IST (Updated: 19 March 2022 12:53 AM IST)
t-max-icont-min-icon

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 63). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மேலும் தேசிங்கின் மனைவி தனது மகன்களுடன் வசித்து வருகிறார். இதனால் தேசிங்கு வீட்டில் தனியாக தங்கியிருந்தார்.
கடந்த 12.12.2019 அன்று அதே பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால், அவள் தனது வீட்டின் முன்பு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த தேசிங்கு, சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

முதியவர் கைது

இதற்கிடையே சிறுமியின் தாத்தா-பாட்டி சாமி கும்பிடுவதற்காக, சிறுமியை அழைக்க சென்றனர். அப்போது சிறுமி அழுது கொண்டிருந்தாள். இதை பார்த்த அவர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது தாத்தா-பாட்டியிடம் தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிங்கை கைது செய்தனர்.

20 ஆண்டு சிறை

மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட தேசிங்குக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட கலெக்டர் 30 நாட்களுக்குள் அரசின் ஏதேனும் திட்டங்கள் மூலம் ரூ.1¼ லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Next Story