மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 March 2022 1:00 AM IST (Updated: 19 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் போராட்டம்
மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆஸ்பத்திரி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். 
போராட்டத்தின் போது, மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மருத்துவ சான்று வாங்க வரும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பு செய்யாமல் சான்று வழங்க வேண்டும். அப்போது அனைத்து விதமான டாக்டர்களும் கலந்து கொண்டு சான்று அளிக்க வேண்டும்.
அரசு பதிவு பெற்ற டாக்டர்கள் மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டையை பார்த்து ெரயில் மற்றும் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்..
½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் மற்றும் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
 அதன்பேரில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story