ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா


ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 19 March 2022 2:06 AM IST (Updated: 19 March 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர விழா
ஈரோடு திண்டலில் பிரசித்திபெற்ற வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும் வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பால், தயிர், திருமஞ்சனம் உள்பட பல்வேறு பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரம்
பின்னர் வேலாயுதசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதேபோல் வள்ளி, தெய்வானை, சமேத வேலாயுதசாமியின் உற்சவ சிலை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர்.
ஈரோடு முனிசிபல் காலனி பாப்பாத்திக்காடு வீதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பாலமுருகன் அருள் பாலித்தார். இதேபோல் காசிபாளையம் மலேசிய முருகன் கோவில் உள்பட ஈரோட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story