சேலத்தில் மாரத்தான் போட்டி
சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி சேலத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
சேலம்:-
சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி சேலத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
சுதந்திர திருநாள்
75- வது சுதந்திர தின விழாவையொட்டி, விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெருமைகளை போற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் “சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா” நடத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் ஒரு பகுதியாக புதிய பஸ் நிலையம் அருகில் சேலம் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. அதில் வேளாண்மை துறையால் பாரம்பரிய நெல் கண்காட்சி, விவசாயிகளுக்கான வேளாண் திட்டங்கள் குறித்தும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாரத்தான் போட்டி
இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். உதவி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த போட்டி பெரியார் மேம்பாலம், 4 ரோடு வழியாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பரிசு
ஆண்கள் பிரிவில் விக்னேஷ் குமார் முதல் இடத்தையும், புவன் 2-ம் இடம், சுபாஷ் அஸ்வின் 3-ம் இடம் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதல் இடத்தை அனுஷியா, 2-ம் இடம் ரோஷிணி, 3-இடம் விமலா ஆகியோர் பெற்றனர். சிறப்பு பிரிவில் அஜித் குமார் வெற்றி பெற்றார்.
பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பயிற்சியாளர்கள் சங்கர், இளம்பரிதி, மகேந்திரன், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story