பெருந்துறை அருகே கட்டையால் தாக்கி வயதான தம்பதியிடம் கொள்ளையடிக்க முயன்ற 4 பேர் கைது
பெருந்துறை அருகே கட்டையால் தாக்கி வயதான தம்பதியிடம் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
பெருந்துறை அருகே கட்டையால் தாக்கி வயதான தம்பதியிடம் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
கட்டையால் தாக்கினர்...
பெருந்துறையை அடுத்த சீனாபுரம் காங்கிரசன்புதூர் அருகே உள்ள கீழேரிபாளையம் சுப்பராயன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகசாமி (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி அருக்காணி (65). இவர்களுடன் மகன் சின்னச்சாமி (45), மருமகள் லதா (37), பேரன்கள் சுகந்த் (14), நிஷாந்த் (11) ஆகியோர் வசித்து வருகிறார்கள். சின்னச்சாமி, லதா, சுகந்த், நிஷாந்த் ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொள்ளையர்கள் சிலர் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு உள்ள இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட தடுப்புகளை தாண்டி குதித்து உள்ளனர். அவர்களை கண்டதும் வாசலில் நின்று கொண்டிருந்த அருக்காணி, நீங்க யாரு? என கேட்க அவருடைய தலையில் கட்டையால் தாக்கி உள்ளனர். வலியால் அலறி துடித்த அவருடைய சத்தம் கேட்டு வந்த முருகசாமியையும் கட்டையால் கொள்ளையர்கள் தாக்கி உள்ளனர்.
வலைவீச்சு
அப்போது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த நாய் ெகாள்ளையர்களை பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் அவர்கள் நாயையும் கட்டையால் தாக்கினர். நாய் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டதும், அருகில் உள்ளவர்கள் முருகசாமியின் தோட்டத்துக்கு விைரந்து வந்து உள்ளனர். பொதுமக்களை கண்டதும், கொள்ளையர்கள் தங்களுடைய திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து கொள்ளையர்களால் தாக்கப்பட்ட முருகசாமி, அருக்காணி ஆகியோர் மீட்கப்பட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தார்கள்.
தனிப்படை அமைப்பு
இதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஆறுமுகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து சென்றார்கள்.
இந்தநிலையில் நேற்று சீனாபுரம் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும் வகையில் காலில் காயத்துடன் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். உடனே தனிப்படை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர், ஊஞ்சலூர் அருகே உள்ள கொளாநல்லியை சேர்ந்த கவியரசு (30) என்பதும், இவரும், இவருடைய நண்பர்கள் ஊஞ்சலூர் கொம்பனைபுதூைர சேர்ந்த சரவணன் (32), வட்டக்கல்வலசை சேர்ந்த சங்கர் (28), காரணாம்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த் (20) ஆகியோருடன் சேர்ந்து காங்கிரசன்புதூர் சுப்பராயன் தோட்டத்து வீட்டில் முருகசாமி, அருக்காணி ஆகியோரை கட்டையால் தாக்கி திருட முயன்றவர்கள் என்று தெரிந்தது.
4 பேர் கைது
கொள்ளையர்கள் தப்பி ஓடும்போது காலில் காயம்பட்டு கவியரசுவால் அதிக தூரம் செல்ல முடியாததால் அவரை விட்டு மற்ற கொள்ளையர்கள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டதும் தெரிந்தது.
இதையடுத்து கவியரசு கொடுத்த தகவலின் பேரில் காரணாம்பாளையத்தில் பதுங்கியிருந்த சரவணன், சங்கர், பிரசாந்த் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தார்கள்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பிடிபட்ட கொள்ளையர்கள் 4 பேருக்கும் மூளையாக செயல்பட்டது திங்களூரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் என்று தெரியவந்துள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story