உக்ரைனில், ரஷியாவின் தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் நாளை மறுநாள் கர்நாடகம் வருகிறது
உக்ரைனில் ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மருத்துவ மாணவர் நவீனின் உடல் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) கர்நாடக தலைநகர் பெங்களூரு கொண்டு வரப்படுகிறது.
பெங்களூரு:
நவீனின் உடல்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் மீது ரஷியா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் 22 ஆயிரம் பேரை மத்திய அரசு பாதுகாப்பாக மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது. இதற்கிடையே கார்கிவ் நகரில் தான் பதுங்கி இருந்த பதுங்கு குழியில் இருந்து உணவு வாங்க வெளியே சென்று வரிசையில் நின்று இருந்த கர்நாடக மாணவர் நவீன்(வயது22) ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார். அவர் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். அவரது உடல் கார்கிவ் நகரில் உள்ள சவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவர் ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்தைச் சேர்ந்தவர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அவரது வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கினார். மேலும் நவீனின் உடலை கர்நாடகம் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடகம் வருகிறது
மேலும் நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் நவீனின் உடல் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) கர்நாடகம் கொண்டு வரப்படுகிறது.
அன்று அதிகாலை 3 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு எடுத்து வரப்படுகிறது. பெங்களூருவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஹாவேரிக்கு நவீனின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த தகவலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story