தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கீழப்பழுவூரில் நாளை நடக்கிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் அரியலூர், திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெறும் மனுதாரர்களது வேலை வாய்ப்பு பதிவுகள் ஏதும் ரத்து செய்யப்படாது. 18 வயது முதல் 35 வயது வரையிலான 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.மேலும், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலை வாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், வேலை வாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திற்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. எனவே இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுனர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து பங்கேற்கலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story