பச்சிளம் ஆண் குழந்தை பிணம்
தஞ்சையில் கழிவுநீர் வாய்க்காலில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. அந்த குழந்தை கொலை செய்யப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் கழிவுநீர் வாய்க்காலில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. அந்த குழந்தை கொலை செய்யப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் ஆண் குழந்தை பிணம்
தஞ்சை மேலஅலங்கம் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மை பணியாளர்கள் நேற்றுகாலை சென்றனர். அப்போது கழிவுநீர் வாய்க்காலில் சிறிய சாக்குப்பை கிடந்தது. அந்த சாக்குப்பையை எடுத்து பார்த்தபோது, அதில் துணிகள் சுற்றப்பட்டு, பச்சிளம் ஆண் குழந்தை இறந்தநிலையில் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே அந்த வழியாக சென்றவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனே தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை தொப்பிள் கொடியுடன் இருந்ததால் பிறந்து சில மணிநேரமே ஆனநிலையில் வாய்க்காலில் கொண்டு வந்து வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
ஆஸ்பத்திரியில் விசாரணை
இந்த குழந்தையை வீசிவிட்டு சென்றது யார் என உடனடியாக தெரியவில்லை. குழந்தை யாருடையது என்பதை கண்டறிவதற்காக தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் சென்றனர். அங்கு பிரசவத்திற்காக ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளின் விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் கடந்த 2 நாட்களில் குழந்தை பெற்றவர்களின் விவரங்களை சேகரித்து, அந்த குழந்தைகளுடன் தாய்மார்கள் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களா என விசாரணை நடத்தினர்.
அதுமட்டுமின்றி ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் இவற்றின் மூலம் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மேலஅலங்கம், மேலவீதி பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை பிணமாக கிடந்த பகுதியில் பெண் ஒருத்தி, நைட்டி அணிந்து கொண்டு சிறிய சாக்குப்பையில் பச்சிளம் ஆண் குழந்தையை எடுத்து வந்து கழிவுநீர் வாய்க்காலில் தூக்கி வீசிய காட்சி பதிவாகி இருந்தது.
பிரேத பரிசோதனை
அந்த காட்சிகள் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் பச்சிளம் ஆண் குழந்தையை கழிவுநீர் வாய்க்காலில் வீசி எறிந்த பெண் யார்? என்பது அடையாளம் தெரிந்தது. பச்சிளம் ஆண் குழந்தையை கொலை செய்து கொண்டு வந்து வீசினாரா? அல்லது பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்ததால் கால்வாயில் வீசினாரா என்ற விவரம் தெரியவில்லை. இதனால் பச்சிளம் ஆண் குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story