பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து
பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரியலூர்:
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு;-
பாரபட்சமின்றி கடன்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சிலால் பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்:-
நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலை மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு முனைப்புடன் அகற்றி நீர்நிலைகளை ஆழப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் பயிர்க்கடன் வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாரபட்சமில்லாமல் அனைவரும் பயனடையும் வகையில் விவசாயிகளை தேர்வு செய்து கடன் வழங்க வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டதற்கு பதிலாக, அந்த தொகையை பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவிடலாம்.
ஏமாற்றம்
உடையார்பாளையத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரி அஜீம்:-
நிதி பற்றாக்குறையை குறைக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. புதிய வரிவிதிப்புகள், கட்டண உயர்வுகள் இல்லை. நீர்நிலை பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள், கல்விக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாத ஊதியம் இடம்பெறாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.
செந்துறையை சேர்ந்த குடும்பத்தலைவி அலமேலு:-
உயர்கல்வியில் சேரும்(கல்லூரி) மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவது வரவேற்கத்தது. ஆனால் படித்த பெண்கள் பயன்பெறும் வகையில் இருந்த திருமண உதவி திட்டத்தை மாற்றியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதேபோன்று குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்காதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
Related Tags :
Next Story