குவாரி பகுதியில் குப்பை கொட்டிய விவகாரம்: கர்நாடக ஐகோர்ட்டில் மாநகராட்சி தலைமை கமிஷனர் மன்னிப்பு கேட்டார்
பெங்களூரு மிட்டகானஹள்ளியில் குவாரியில் குப்பை கொட்டிய விவகாரத்தில் மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, அவர் மீது கோர்ட்டு அவமதிப்பை கைவிடுவதாக கர்நாடக ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
பெங்களூரு:
குவாரியில் குப்பை
பெங்களூருவில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை மீறி பெங்களூரு மிட்டகானஹள்ளியில் உள்ள குவாரி பகுதியில் மாநகராட்சி குப்பை கழிவுகளை கொட்டி இருந்தது.
இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவை மீறி மிட்டகானஹள்ளி குவாரியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததால், மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா மீது கோர்ட்டு அவமதிப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மிட்டகானஹள்ளி குப்பை விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை மீறியது குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
தலைமை கமிஷனர் மன்னிப்பு
இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நேற்று முன்தினம் பொதுநல மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா சார்பில், கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பத்திரத்தில் மிட்டகானஹள்ளியில் குப்பை கொட்டி விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்பதாக கவுரவ் குப்தா தெரிவித்திருந்தார்.
மேலும் கோர்ட்டு மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்துள்ளேன். எக்காரணத்தை கொண்டும் கோர்ட்டு உத்தரவை மீறும் எண்ணம் எனக்கு கிடையாது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி குப்பை கொட்டப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிவரும் நாட்களில் கோர்ட்டு உத்தரவு மீறப்படாமல் இருக்கப்படும். கோர்ட்டு உத்தரவுகள் சரியாக பின்பற்றப்படும் என்று பிரமாண பத்திரத்தில் கவுரவ் குப்தா தெரிவித்திருந்தார்.
அவமதிப்பை கைவிடுவதாக...
இதையடுத்து, மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா மீதான கோர்ட்டு அவமதிப்பை கைவிடுவதாக தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தரவிட்டார். மேலும் குப்பை விவகாரத்தில் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை கண்டிப்பாக பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.
கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story