4 ஏக்கரில் உருவான தமுக்கம் கலையரங்கம்


4 ஏக்கரில் உருவான தமுக்கம் கலையரங்கம்
x
தினத்தந்தி 19 March 2022 2:58 AM IST (Updated: 19 March 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தமுக்கம் கலையரங்கம், 4 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரத்து 500 பேர் அமரலாம். அதோடு கலையரங்கத்தின் கீழ் உள்ள வாகன காப்பகத்தில் 455 வாகனங்களை நிறுத்த முடியும்

மதுரை
மதுரை தமுக்கம் கலையரங்கம், 4 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரத்து 500 பேர் அமரலாம். அதோடு கலையரங்கத்தின் கீழ் உள்ள வாகன காப்பகத்தில் 455 வாகனங்களை நிறுத்த முடியும்.
நாயக்கர் ஆட்சி
மதுரை தமுக்கம் மைதானத்தின் வரலாறு பல நூற்றாண்டுகளை கடந்தது. மதுரையை நாயக்கர்கள் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த முதல் நாயக்க அரசர் விஸ்வநாத் நாயக் ஆட்சியின் போது தான் தமுக்கம் மைதானம் உருவாக்கப்பட்டது. இந்த மைதானம் 1529-ம் ஆண்டு முதல் 1564-ம் ஆண்டிற்குள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அப்போது அரசர்களின் இல்ல நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், குதிரையேற்றம் மற்றும் வாள்வீச்சு போன்ற தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கும் இடமாக இருந்து உள்ளது.
1670-ம் ஆண்டு இந்த தமுக்கம் மைதானத்தின் எதிரே ெரங்ககிருஷ்ணா முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி காலத்தில் அரண்மனை கட்டப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த ராணி மங்கம்மாளின் கோடை கால அரண்மனையாக இது திகழ்ந்தது. ஏனென்றால் அந்த காலத்தில் நாயக்கர் ஆட்சியின் தலைநகராக திருச்சி இருந்தது. எனவே அரசர்கள் அங்கிருந்து மதுரைக்கு வந்தால், இங்கு தங்குவதற்கு தமுக்கம் அரண்மனை கோடை கால அரண்மனையாக இருந்தது. இந்த அரண்மனை தான் தற்போது காந்தி மியூசிமாக உள்ளது.
பொருட்காட்சிகள்
தமுக்கம் மைதானத்தின் ஒரு பகுதியில் சுவர்கள் இல்லாமல் தூண்களால் தாங்கப்பட்ட ஒரு மண்டபம் இருந்தது. அதனை தெலுங்கில் தமகமு என்று அழைத்தார்கள். நாளடைவில் இந்த வார்த்தை தமுக்கம் என்ற பெயர் ஏற்பட்டது என கூறுகிறார்கள். ஆனால் தமுக்கம் என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் அல்லது வசந்த மாளிகை என்று பொருள்படும் என்கிறார்கள்.. நாயக்கர் ஆட்சிக்கு பின் வந்த ஆங்கிலேய உயர் அதிகாரிகள், ராணி மங்கம்மாளின் அரண்மனையில் தங்கினர்.
சுதந்திரத்திற்கு பின், தமுக்கம் மைதானத்தில் மதுரை மாநகராட்சி சார்பில் 1962-ம் ஆண்டில் ஒரு கலையரங்கம் கட்டப்பட்டது. மீதம் இருந்த பகுதிகள் காலியாகவே இருந்து வந்தன. தமுக்கம் மைதானத்தில் உலக தமிழ் மாநாடு, பாரதியார் நூற்றாண்டு விழா, அரசியல் கட்சி மாநாடுகள், கண்காட்சிகள், பொருட்காட்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. மதுரையில் பொழுது போக்கு அம்சம் எதுவும் இல்லாத நிலையில், தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மக்களின் மனம் கவருவதாக இருந்தது. மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்தது தமுக்கம் மைதானம் என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.
3,500 பேர் அமரலாம்
இந்தநிலையில் தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கை இடித்து விட்டு, புதிய கலையரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.47 கோடியே 72 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டும் பணி 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அதன் இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. தமுக்கம் மைதானம் 9.68 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் சுமார் 4.08 ஏக்கர் அளவிற்கு கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 5.5 ஏக்கர் நிலம் காலியாக வைக்கப்பட்டு உள்ளது.
கலையரங்கத்தின் தரைத்தளத்தின் கீழ் வாகன காப்பகம் கட்டப்பட்டுள்ளது. அங்கு 215 இருசக்கர வாகனங்களும், 240 கார்களும் என மொத்தம் 455 வாகனங்களை நிறுத்த முடியும். இந்த கலையரங்கத்தில் ஒரே நேரத்தில் 3,500 பேர் அமர முடியும். இதுதவிர கலையரங்கத்தின் பக்கத்தில் தனியாக 800 பேர் அமரக்கூடிய வகையிலான உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. கலையரங்கத்தின் எதிரே உள்ள காலி இடத்தில் ஆயிரக்கணக்கானோர் அமரலாம். அதே போல் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்த முடியும். தற்போது தமுக்கம் மைதானத்திற்கு நான்குபுறமும் வாசல் உள்ளது. அதில் முன்புறம் உள்ள அழகர்கோவில் சாலை வாசல் வி.ஜ.பி.களுக்கும், யூனியன் கிளப் கட்டிடத்தின் வலதுபுறம் உள்ள சாலையில் பொதுமக்கள் வரும் முக்கிய வாசலாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர காந்தி மியூசியம் மற்றும் முத்தாநந்தா சாலையில் வாசலும் வைக்கப்படுகிறது.
மேயர் ஆய்வு
மிகப்பிரம்மாண்டமாய், உருவாகி இருக்கும் தமுக்கம் கலையரங்கம் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகளை முடித்து மே மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தமுக்கம் கலையரங்கம் கட்டுமான பணிகளை மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், கமிஷனர் கார்த்திகேயன், நகர் பொறியாளர் அரசு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். 
அப்போது உதவி செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், உதவி பொறியாளர் ஆரோக்கிய சேவியர், சுகாதார அலுவலர் வீரன், கவுன்சிலர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story