மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் 1-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கம்
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கும், மானாமதுரையில் இருந்து திருச்சிக்கும் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் பாசஞ்சர் மற்றும் டெமு ரெயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
மதுரை
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கும், மானாமதுரையில் இருந்து திருச்சிக்கும் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் பாசஞ்சர் மற்றும் டெமு ரெயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா கொள்ளை
மத்திய அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்ட பொதுப்பெட்டிகள் படிப்படியாக மீண்டும் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் 3 ஜோடி ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இதில், மதுரையில் இருந்து காலை 7 மணி, நண்பகல் 11 மணி, மாலை 5 மணிக்கும் செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகளை தொடர்ந்து மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு ஒரு ரெயிலும், செங்கோட்டையில் இருந்து மாலை 3 மணிக்கு ஒரு ரெயிலும் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகிறது. ஆனால், இந்த 3 ஜோடி ரெயில்களையும் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்த போதும், ரெயில்கள் இயக்கப்படவில்லை.
இதற்கிடையே, மண்டல ரெயில்வேக்களின் வேண்டுகோளின்படி, அனைத்து மண்டலங்களிலும் குறிப்பிட்ட சில பாசஞ்சர் ரெயில்களை மட்டும் இயக்க சென்ற வாரம் ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரெயில் பெட்டிகளை தயார்நிலையில் வைத்திருக்க அந்தந்த மண்டலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 111 ரெயில்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மதுரை கோட்டத்தில் நெல்லை-நாகர்கோவில், மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில்கள் இயக்க அனுமதியளிக்கப்பட்டது.
செங்கோட்டைக்கு..
ஆனால், இந்த ரெயில்கள் இயக்கப்படும் நாள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து வருகிற 1-ந் தேதி முதல் மாலை 5.15 மணிக்கு சிறப்பு ரெயில் (வ.எண்.0665) புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் அதேநாளில் செங்கோட்டையில் இருந்து ஒரு சிறப்பு ரெயில்(வ.எண்.0662) காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரெயில்களில் 13 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். ரெயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ஏற்கனவே இயக்கப்படும் மதுரை-செங்கோட்டை ரெயிலிலும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story