கும்மிடிப்பூண்டி அருகே விபத்து: அரசு பஸ்-டிப்பர் லாரி மோதல்; 3 பேர் படுகாயம் - டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை ஆந்திர மாநிலம் சத்யவேடு நோக்கி சென்றது. அந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உள்பட மொத்தம் 5 பேர் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தனர். மாதர்பாக்கம் சாலையில் இருந்து சத்யவேடு சாலை நோக்கி சென்ற பஸ் சிறுவாடா சந்திப்பில் திரும்பும் போது, எதிரே சத்யவேட்டில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று பஸ்சின் முன்பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியதில் பஸ் டிரைவரான வாணியமல்லி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 44), பள்ளிப்பட்டை சேர்ந்த கண்டக்டர் சங்கரன் (48) மற்றும் பெண் பயணியான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஸ்டெல்லா என்கிற சுமித்ரா (30) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story