கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி சிக்கியது - 2 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி சிக்கியது - 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 2:59 PM IST (Updated: 19 March 2022 2:59 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவிற்கு லாரியில் கடத்த முயன்ற 30 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இருந்தும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்தும் கவரைப்பேட்டை-சத்யவேடு சாலை வழியாக ஆந்திராவுக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் தச்சூர் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆந்திரா நோக்கிச்சென்ற சந்தேகத்திற்கு இடமான ராட்சத லாரியை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த லாரியில், 500 மூட்டைகளில் சுமார் 30 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருப்பதும், அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சென்னை திருவொற்றியூர் பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. லாரியில் பயணம் செய்த டிரைவர்களான தஞ்சாவூரை சேர்ந்த சுகுமார் (வயது 49), முருகன் (46) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட ரேசன் அரிசியுடன் லாரியையும், கைது செய்யப்பட்டவர்களையும் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கவரைப்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story