தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பகுதி
தபால் எடுக்கும் நேரம் இல்லை
திருவண்ணாமலையில் பல இடங்களில் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு தபால் பெட்டிகளில் தபால்கள் சேகரிப்படும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அது குறித்த விவரம் இல்லை. எனவே தபால் பெட்டிகளில் தபால்கள் எடுக்கும் நேரத்தை குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.
குப்பைகளை அகற்ற வேண்டும்
ஆரணி-திருவண்ணாமலை சாலையில் அவுசிங் போர்டு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. அது காற்றில் பறந்து சிதறிக்கிடக்கிறது. குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ர.சு.ரவிவர்மான், ஆரணி.
நூலக கட்டிடம் சேதம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடியில் செயல்பட்டு வரும் கிளை நூலக கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. மாணவர்கள் உள்பட பலர் இங்கு வந்து படித்துச் செல்கிறார்கள். இந்தக் கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
-கார்த்திகேயன், தானிப்பாடி.
(படம்) மின்கம்பம் சேதம்
வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு வெளி மேட்டுத்தெரு குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. இது பற்றி பல முறை மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.
-கே.சாமிநாதன், வேட்டவலம்.
தினத்தந்திக்கு நன்றி
வாணியம்பாடிக்கு அருகில் வளையாம்பட்டு மேம்பாலத்தில் செடிகள் வளர்ந்திருந்தது. இதுகுறித்து கடந்த மாதம் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் மேம்பாலத்தில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றிைய தெரிவித்துக் கொள்கிறேன்.
-எம்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.
வீணாக தெருவில் செல்லும் குடிநீர்
காட்பாடி தாராபடவேடு மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தெருவில் குடிநீர் வால்வு உள்ளது. மாநகராட்சி மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும்போது அந்த வால்வு பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்து தெருவில் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் செல்கின்றனர். வீணாக செல்லும் குடிநீரை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.
Related Tags :
Next Story