58 வீடு, கடைகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு


58 வீடு, கடைகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 19 March 2022 7:37 PM IST (Updated: 19 March 2022 7:37 PM IST)
t-max-icont-min-icon

ரூ.80 லட்சம் வரி பாக்கி நிலுவையில் உள்ளதால் 58 வீடுகள், கடைகளுக்கு குடிநீர் இணைப்பை கூடலூர் நகராட்சி அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

கூடலூர்

ரூ.80 லட்சம் வரி பாக்கி நிலுவையில் உள்ளதால் 58 வீடுகள், கடைகளுக்கு குடிநீர் இணைப்பை கூடலூர் நகராட்சி அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

ரூ.80 லட்சம் வரி பாக்கி

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் சொத்து, குடிநீர் உள்ளிட்ட வரிகள் செலுத்தாமல் உள்ளனர். இதனால் ரூ.80 லட்சம் வரை வரி பாக்கி நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சி உயர் அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து வரி பாக்கியை உடனடியாக வசூலிக்கும்படி உத்தரவிட்டனர்.

பின்னர் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் வரிகளை உடனடியாக செலுத்தி அலுவலகத்தில் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இருப்பினும் வரியை சரிவர செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. தொடர்ந்து 21 வார்டுகளில் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் தலைமையிலான அலுவலர்கள் இன்று காலை 10 மணி முதல் வீடு வீடாக சென்று வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

பின்னர் அதிக பாக்கி நிலுவையில் வைத்துள்ள வீடுகள், கடைகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் நகராட்சி அலுவலர்களிடம் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலுவை பாக்கியை செலுத்தினால் மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் கண்டிப்புடன் கூறினர்.

இதேபோன்று கூடலூர் நகரில் வரி செலுத்தாமல் காலம் கடத்தி வந்த 2 தனியார் மது பார்களுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகளையும் நகராட்சி அலுவலர்கள் துண்டித்தனர். தொடர்ந்து 10 கடைகள், 48 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள் கூறும்போது, வருகிற 25-ம் தேதிக்குள் பொதுமக்கள் வரிகளை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story