கிராம கோவில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மாத ஊதியம்
கிராம கோவில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரடாச்சேரி:
கிராம கோவில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில் பூசாரிகள் நலசங்க கூட்டம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் சுந்தரம், மாநில செயலாளர் சங்கர், சேலம் மாவட்ட பொருளாளர் குணசேகர், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேட்டு, துணைத்தலைவர் கலியமூர்த்தி, பொருளாளர் குணசேகரன் மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிரணி பூசாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் வாசு மற்றும் கொரடாச்சேரி கலைவேந்தன் ஆகியோர் பேசினர்.
விண்ணப்பங்கள்
முன்னதாக பூசாரிகள் நல வாரியத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதற்கும், ஒரு கால பூஜை திட்டத்தின் நிதி ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கியதற்கும், ஒரு கால பூஜை செய்யும் கோவில் பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை ரூ.1,000 வழங்கியதற்கும் நன்றி தெரிவிப்பது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம், பூசாரிகளுக்கு பணி பாதுகாப்பு உள்பட பல நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கும், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி. ராஜா, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பது.
மாத ஊதியம் வழங்க வேண்டும்
கிராம கோவில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 4 ஆயிரம் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 10 ஆயிரம் பூசாரிகள் என உயர்த்தி வழங்க வேண்டும். ஒரு கால பூஜை நடைபெறாத ஆதிதிராவிடர், அருந்ததியர் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களை கண்டறிந்து அந்த கோவில்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். இந்து சமய அறநிலைய துறையின் மூலம் விலையில்லா கியாஸ் சிலிண்டர்களை அனைத்து கோவில்களுக்கும் வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டையினை உடனே புதுப்பித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் சேட்டு வரவேற்றார். முடிவில் ஜம்பு அய்யப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story