பட்ஜெட் குறித்து விவசாயிகள் தெரிவித்துள்ள கருத்துகள்
பட்ஜெட் குறித்து விவசாயிகள் தெரிவித்துள்ள கருத்துகள்
போடிப்பட்டி,
தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து விவசாயிகள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-
வேளாண் பட்ஜெட்
ஜெகதீஷ், செயலாளர் (உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்):-
இயற்கை விவசாயத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை.தற்போது தென்னை விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ள வெள்ளை ஈ தாக்குதல், கேரள வாடல் நோய் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
குப்புசாமி (குமாரபாளையம், கோட்டமங்கலம்):-
அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை என்பதே அனைத்து விவசாயிகளுக்கும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.
செல்வராஜ் (தலைவர், தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கம்):-
தற்போது தக்காளி கிலோ ரூ. 2-க்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிக உற்பத்திக் காலங்களில் வழங்கப்படும் மானியம் என்பது இதற்கு பலனளிக்காது.அதற்குப் பதிலாக இருப்பு வைத்து விற்பனை செய்தல், மதிப்புக்கூட்டுதல் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
வரவேற்பு
அழகுசுந்தரி மாரிமுத்து (வேடப்பட்டி):-
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம் வரவேற்புக்குரியது.மேலும் மழைக்காலங்களில் அறுவடை செய்த தானியங்களை இருப்பு வைப்பதற்கு பல விவசாயிகளிடம் இடவசதி இருப்பதில்லை.பட்ஜெட்டில் 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கும் திட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.மேலும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டமும் வரவேற்புக்குரியது.
செல்லமுத்து (தலைவர்-உழவர் உழைப்பாளர் கட்சி):-
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உடனடியாக கைமேல் பலன் தரக்கூடிய திட்டங்கள் எதுவும் இல்லை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழி காட்டாதது ஏமாற்றத்தை தருகிறது. விவசாயிகள் வெங்காயம், தக்காளி, போன்ற வற்றை இருப்பு வைத்து விற்பனை செய்ய குளிர்பதன கிடங்கு பற்றிய அறிவிப்பு இல்லை, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் எந்த அறிவிப்பும் இல்லை.
ஈஸ்வரன் (கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்):-
இயற்கை வேளாண்மை, சோலார் பம்ப் செட், டிஜிட்டல் முறையில் விவசாயம், ஆனால், சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் அரசு, சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை.
மருத்துவ பயிர்கள்
வேலுமணி (புள்ளியப்பன்பாளையம்)- வேளாண்மை பட்ஜெட்டில், விதை மஞ்சள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள், இஞ்சி, பூண்டு, போன்ற மருத்துவ பயிர்கள் உற்பத்தியை பெருக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளது.
பாலசுப்பிரமணியம் ( நொச்சிபாளையம்):- வேளாண்மை பட்ஜெட் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்துள்ளனர். இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வழிகாட்டுதல் சிறப்பான அம்சமாகும். பசுமை புரட்சி என்ற பெயரில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, தற்போது விளை நிலங்கள் மலடாகி போனதுதான் மிச்சம். எனவே இந்தத் தருணத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும் சோலார் பம்பு செட்டுகளுக்கு 70 சதவீத மானியம் அளிப்பது, சிறுதானியங்கள், பூண்டு உற்பத்தியை பெருக்குவது போன்றவைகளை வரவேற்கிறோம்.
Related Tags :
Next Story