ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் பாய்ந்த காரால் பரபரப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் பாய்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் பிராஞ்சேரியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு உறவினர்களுடன் சென்று இருந்தார். பின்னர் அவர்கள் நேற்று மதியம் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் குளத்துக்கரை பகுதியில் வந்தபோது, திடீரென்று கார் கிருஷ்ணமூர்த்தியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி குளத்துக்குள் பாய்ந்தது.
குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து இருந்ததால் அதில் கார் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் 3 குழந்தைகளும் அடங்குவர்.
இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் காரில் இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story