கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 27 ந் தேதி வரை நடக்கிறது
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 27 ந் தேதி வரை நடக்கிறது
கடலூர்
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேலை செய்யும் திறன்
தேசிய விலங்கு நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வருகிற 27-ந் தேதி வரை கடலூர் மாவட்டததில் 2-வது கட்ட கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 3.23 லட்சம் கால்நடைகள் பயன்பெற உள்ளது. கோமாரி நோய் கால்நடைகளில், குறிப்பாக குளம்புகள் உள்ள கால்நடைகளில் உற்பத்தி திறன், வேலை செய்யும் திறன் மற்றும் இனப்பெருக்க திறனை குறைத்து பொருளாதார ரீதியாக கால்நடைகளை தகுதியற்றவையாக்கி வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதால், அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலமாக கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தை கடந்த 2012 மார்ச் முதல் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தி வருகிறது.
7 வாகனங்கள் தயார்
தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள கால்நடை உதவி மருத்துவர்களின் தலைமையில் 50 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கிராம அளவிலான செயற்கை கருவூட்டல் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தடுப்பூசிகளை கிராமங்கள் தோறும் எடுத்துச்செல்ல, இத்துறையின் 7 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் போதுமான அளவு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதனால் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி கோமாரி நோய் தடுப்பூசி அளித்து, கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து தங்கள் மாட்டினங்களை பாதுகாத்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story