மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
திருமருகல் அருகே மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்குவாரி அமைக்க எதிர்ப்பு
திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியான தோப்புத்திடல் என்ற இடத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் மண்குவாரி அமைத்து, அதில் இருந்து எடுக்கப்படும் மண் நாகை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைஅமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மண் குவாரி அமைக்க கூடாது என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
கிராம மக்கள் போராட்டம்
இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மண் குவாரி அமைக்கப்பட உள்ள இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், கிராம தலைவர் குப்புசாமி, துணைத் தலைவர் தம்புராசு, செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆனஸ்ட்ராஜ், மாரியப்பன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் மண் குவாரி அமைக்க அனுமதி அளித்ததை ரத்து செய்ய வேண்டும். அனுமதி அளித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story