பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது வரவேற்கத்தக்கது
தமிழக அரசு பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது வரவேற்கத்தக்கது என நாகையில், இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார்.
வெளிப்பாளையம்:
தமிழக அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது வரவேற்கத்தக்கது என நாகையில், இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார்.
பேட்டி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டம் நாகையில் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வரவேற்கத்தக்கது
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள தி.மு.க அரசு நல்ல தொடக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக பட்ஜெட்டை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பெண் கல்விக்கு தமிழக அரசு அளிக்கும் முக்கியத்துவம் வரவேற்கத்தக்கது.
பா.ஜ.க. ஆளும் பல்வேறு மாநிலங்களில் பெண்கள், பெண் குழந்தைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு கல்வி, பாதுகாப்பு கிடைத்துள்ளது.
வேளாண்மை பட்ஜெட்
ஜி.எஸ்.டி. வரியால் தமிழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தனி பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித பயனும் இல்லை. ஆனால் தமிழக சட்டசபையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க தி.மு.க. எடுக்கும் முயற்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்டு எப்போதும் துணை நிற்கும். 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் பா.ஜ.க. மக்களின் ஆதரவை இழந்து வருகிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கும் செயல்களில் பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றுபட்டு இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும். மாநிலத்தின் உரிமைகள், அதிகாரங்களை பறிக்கும் செயல்களில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வக்கீல் பாண்டியன், மாவட்ட செயலாளர் சம்பந்தம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story