சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கூடுதல் விரிவாக்கம் செய்து உளுந்தூர்பேட்டை சாலையுடன் இணைக்க வேண்டும்


சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கூடுதல் விரிவாக்கம் செய்து உளுந்தூர்பேட்டை சாலையுடன் இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 March 2022 10:16 PM IST (Updated: 19 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கூடுதல் விரிவாக்கம் செய்து உளுந்தூர்பேட்டை சாலையுடன் இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி பேசினார்.

கள்ளக்குறிச்சி, 

நாடாளுமன்றத்தில் நடந்த மானிய கோரிக்கையில் கள்ளக்குறிச்சி உறுப்பினர் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி பேசியதாவது:- 
2008-ம் ஆண்டு ரூ.941 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 2013-ம் ஆ ண்டு முடிவடைந்திருக்க வேண்டிய உளுந்தூர்பேட்டை-சேலம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை இன்னும் முடிவடையாமல் உள்ளது. 

மக்கள் தொகை மிகுந்த 8 நகரங்கள் மற்றும் ஊர்களில் (ஆத்தூர், வாழப்பாடி, உடையார்பட்டி, சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர் பேட்டை) புறவழிச்சாலைகள் நிறைவடையாமல் இருவழிச் சாலைகளாக இருப்பதே இதற்கு காரணம். இதன் விளைவாக சாலை விபத்துகளில் இதுவரை 800 பேருக்கு மேல் பலியாகி இருக்கிறார்கள். 10 ஆண்டுகளாக தொடரும் இந்த நிலைக்கு தீர்வு காண வேண்டும். 

கூடுதல் விரிவாக்கம் 

சேலம்-சென்னை ‘சாகர் மாலா’ திட்டம் இரு நகரங்களையும் இணைக்கும் அதிவிரைவு சாலை திட்டம் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த பசுமைவழிச்சாலைக்கு தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து விடுமென விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து தடுத்துள்ளனர். ஏற்கனவே சேலம்- சென்னையை இணைக்கும் 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. எனவே இந்த தேவையற்ற திட்டத்திற்கு மாற்றாக இருக்க வாய்ப்புள்ளது, சேலம்- சென்னையை உளுந்தூர்பேட்டை வழியாக இணைக்கும் நெடுஞ்சாலைத் திட்டம். எனவே இந்த சாலை திட்டத்தை கூடுதல் விரிவாக்கம் செய்து முழுமையாக நிறைவேற்றுதன் மூலம் சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு உதவுவதோடு, இந்த மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும். 
இவ்வாறு அவர் பேசினார். 

Next Story