நிதி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகை நகராட்சியில் நிதி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சியில் நிதிப் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்ம ன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகர்மன்ற கூட்டம்
நாகை நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் பேசும்போது கூறியதாவது:-
மணிகண்டன் (அ.தி.மு.க.) :- நாகை நகராட்சி எல்லையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்துள்ளது. குப்பை தொட்டிகள் வைத்தால் தான் தூய்மையாக இருக்கும்.
பரணிகுமார் (அ.தி.மு.க.) :- நாகை நகராட்சி நிதி நிலை நெருக்கடியில் உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே நாகை நகராட்சிக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறு ஏலம் விட வேண்டும்
சுரேஷ் (சுயேச்சை):- நகராட்சி வருமானத்தை பெருக்க நகராட்சிக்கு சொந்தமான கடைகளை மறு ஏலம் விட வேண்டும். கூடுதல் தொகைக்கு ஏலம் விட்டால் நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். அதே போல் நாகை நம்பியார் நகரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை சீர் செய்ய வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் பழுதடைந்து இருப்பதால் நாகை நகரில் எங்கு பார்த்தாலும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
நத்தர் (காங்கிரஸ்):- நாகை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தூய்மை பணி சரியான முறையில் நடைபெறவில்லை. தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்
ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு
மாரிமுத்து (தலைவர்):- நகர்மன்ற தலைவர் பொறுப்பேற்பதற்கு முன்பே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை நகராட்சிக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியை கொண்டு முதல்கட்ட பணிகள் நடந்து வருகிறது. முதல்-அமைச்சரிடம் கேட்டு இன்னும் கூடுதல் நிதியை பெற்று நகராட்சியை தரம் உயர்த்தப்படும்.
செந்தில்குமார் (துணைத்தலைவர்):- கோடைக்காலம் வர உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட தொடங்கி விட்டது. அணைக்கரையில் இருந்து நாகைக்கு வழங்க வேண்டிய குடிநீர் அளவு சரியாக வினியோகம் செய்யப்படுவதாக கூறுகின்றனர். அப்படி இருக்கும் போது எப்படி குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை ஆய்வு செய்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
குளறுபடி
சுபஸ்ரீ (ம.தி.மு.க.) : நாகை நெல்லுக்கடை நகராட்சி பள்ளிசுற்றுசுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அதனை உடனே சரிசெய்ய வேண்டும்.
சுலைகாபீவி (தி.மு.க.) : வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு பட்டியலில் குளறுபடிகள் உள்ளது. எனவே புதிதாக பட்டியல் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story