ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டன.
நாமக்கல்:
செல்போன்கள் திருட்டு
நாமக்கல் மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. இது தொடர்பாக நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவில் பலர் புகார் அளித்து வருகின்றனர். மேலும் 1930 என்ற எண் மூலமாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் தலைமையிலான குழுவினர், திருட்டு போன செல்போன்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
104 செல்போன்கள் மீட்பு
அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் திருடப்பட்ட மற்றும் தொலைந்துபோன ரூ.20 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன செல்போன்களை, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
அப்போது, அவர் நகை, பணம் போல் செல்போன்களையும் பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். திருட்டு போனால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story