பள்ளிபாளையத்தில் வரி செலுத்தாதவர்களின் 50 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு-நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
பள்ளிபாளையத்தில் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
பள்ளிபாளையம்:
வரி நிலுவை
பள்ளிபாளையம் நகராட்சியில் வீடுகள், கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கான 2020-2021-ம் ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தாமல் பொதுமக்கள் நிலுவையில் வைத்திருந்தனர். மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள், வணிக நிறுவனங்களின் வாடகையை கட்டாமலும் இழுத்தடித்தனர்.
இதனால் சொத்து வரி, குடிநீர், தொழில் வரி மற்றும் கடை வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்றும், மீறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் சிலர் வரிகளை செலுத்தவில்லை.
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
இந்தநிலையில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உத்தரவின் பேரில், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் நேற்று குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணி தொடங்கியது.
அதன்படி நகராட்சியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை, தனியார் திருமண மண்டபம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். மேலும் வரி பாக்கியை சட்டப்படி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story